கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண் ஒருவருடன், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திய அந்த இளைஞர், அப்பெண்ணை கைகளாலும், தான் அணிந்து வந்திருந்த ஹெல்மெட்டாலும் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் அப்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த அந்த இளைஞர், மயக்கமடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கேட்டு, அந்த வழியேச் சென்றவர்களின் உதவியைக் கேட்டுள்ளார். இந்நிலையில், யாரும் உதவ முன் வராத நிலையில், அப்பெண்ணைத் தூக்கி இருசக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு அந்த இளைஞர் சென்றுவிட்டார்.
இதை அந்த வழியே சென்ற சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, வீடியோவில் உள்ள ஆதாரத்தின் அடிப்படையில், இளம்பெண்ணை தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில், அந்த வீடியோவில் பதிவான வண்டி எண்ணை வைத்து, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் என்பவரை கோயம்பேடு போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண் சந்தியா எனவும், அவர் ரோஷனின் மனைவி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், குடும்ப பிரச்சினை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் தனது மனைவியை தாக்கியதாகவும் போலீசாரிடம் ரோஷன் தெரிவித்துள்ளார்.