ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் திடீர் சந்திப்பு!
ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் திடீர் சந்திப்பு!
அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சமி அணியை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இன்று சந்தித்து பேசினர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் தமிழக அரசியல் பரபரப்பாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கும் பங்கு உண்டு. ஆளுநர் மும்பையில் இருந்து சென்னை வருவதை கூட பரபரப்பாக லைவ் கம்மெண்ட்ரி கொடுத்துக்கொண்டிருந்தது ஊடகங்கள். அந்த அளவுக்கு ஆளுநரின் சென்னை வருகையும் பரபரப்பாக இருந்தது.
இந்நிலையில் அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பாக பேசப்படுவது, அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் ஒன்று சேர உள்ளதாக வரும் தகவல் தான். அப்படி ஒன்று சேர்ந்தால் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமா, மீண்டும் முதல்வராக ஓபிஎஸ் வருவாரா, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக நீடிப்பாரா என்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.
இந்த சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், அரசியல் குறித்து எதுவும் இந்த சந்திப்பில் பேசவில்லை. ஆளுநர் எனது நீண்டகால நண்பர் எனவே நட்பு ரீதியில் தான் அவரை சந்தித்தேன் என கூறிவிட்டு சென்றுவிட்டார். தம்பிதுரையும் அமைச்சர் ஜெயக்குமாரும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.