எட்டாம் வகுப்பு படிக்கு பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முயன்ற தாயை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் தாய்தான் சமையல் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் சமையல் காண்டிராக்டர் ஒருவர் சமையல் விஷயமாக, அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது பள்ளி மாணவியின் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மாணவியின் தாயிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமையல் காண்டிராக்டருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு நிச்சயம் செய்து வைத்துள்ளனர்.
பிறகுதான் மாணவிக்கு, தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்ற விஷயமே தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவி தனது தாயாரிடம் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்றும் தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால், மாணவியின் வேண்டுகோளை நிராகரித்து அவரது தாய், திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். இதை அறிந்த மாணவி தனது பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன், நெல்லை மாவட்ட சிறுவர் நலப்பிரிவுக்கு புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து மாணவிக்கு நடக்க இருந்த மாணவி மாரியம்மாளின் திருமணத்தை, நெல்லை மாவட்ட சிறுவர் நலப்பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் மாணவியை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் தங்கி தையல் வகுப்பு படிக்க வைத்தனர்.
மேலும் மாணவி, மாவட்ட நீதிபதியிடம் தனக்கு பெற்றோருடன் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் இங்கேயே தங்கி பள்ளிக்கூடத்தில் படிக்க விரும்புவதாகவும் கூறினார்.
இதனையடுத்து புளியங்குடி காவல் துறையினர் சிறுமியின் தாய், புளியங்குடியைச் சேர்ந்த சமையல் காண்டிராக்டர் மற்றும் அவரது 2 சகோதரிகள் ஆகிய 4 பேர் மீதும் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது சிறுமியின் தாயை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.