தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டது என்பதும் மார்ச் இரண்டாவது வாரத்திலேயே கடும்வெயில் அடித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அவ்வப்போது காற்று வேகமாறுபாடு காரணமாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இன்று முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரை இரண்டு முதல் மூன்று டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மதியம் 12 மணியளவில் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் வெப்பநிலை தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.