தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்த நிலையில், அந்த வாக்குறுதி நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறிய போது, ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், இன்னும் 5 அல்லது 6 மாதங்களுக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட சில பகுதிகளில் மாதம் ஒருமுறை மின் கட்டண வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.