Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் - ரூ. 570 கோடி பணம் பறிமுதல்

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் - ரூ. 570 கோடி பணம் பறிமுதல்
, ஞாயிறு, 15 மே 2016 (08:37 IST)
திருப்பூரில் நள்ளிரவில் நடந்த சோதனையில், 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 

 
வெள்ளிக்கிழமை 13-06-15 அன்று நள்ளிரவு 12 மணியளவில் அவினாசி அருகே பெருமாநல்லூரில் - குன்னத்தூர் சாலையில் 3 கண்டெய்னர் லாரிகள் வரிசையாக வந்துள்ளன. அந்த கண்டெய்னர் லாரிகளுக்கு முன்னும் பின்னுமாக 3 கார்கள் வந்துள்ளன.
 
சந்தேகமடைந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்துமாறு கூறியுள்ளார்கள். ஆனால், லாரியை ஓடுநர்கள் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள், அந்த கண்டெய்னர் துரத்திச் சென்று லாரிகளை மடக்கிப் பிடித்துள்ளனர்.
 
அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், 3 கார்களில் வந்த 15 பேர் தங்களை ஆந்திர மாநில காவல் துறையினர் என்றும், கோவையில் உள்ள ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். 
 
ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாததாக கூறப்படுகிறது. மேலும், ஆந்திர மாநில காவல் துறையினர் என்று கூறியவர்கள் சீருடையில் இல்லாமல், சாதாரண உடையில் இருந்தது சந்தேகத்தை வலுப்ப்படுத்தி உள்ளது.
 
இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திருப்பூர் மாநகர துணை ஆணையர் ஆகியோர் கண்டெய்னர் லாரிகளின் கதவுகளை திறந்து சோதனை நடத்தினார்கள். அப்போது கண்டெய்னரின் பின்பகுதியில் மரப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
 
விசாரணைக்குப் பின்னர், அவர்கள் ஆந்திர மாநில காவல்துறையினர் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தாங்கள் வந்த காருக்கு திரும்பிச் சென்று, தங்களுடைய சீருடைகளை அணிந்து கொண்டும், துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியும் வந்து நின்றனர். 
 
அவர்கள், வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் என்று கூறினாலும் நகல் ஆவணங்கள் மட்டுமே இருந்ததால் 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிகாலையில் அதிகாரிகள் கொண்டு வந்தனர்.
 
வங்கி ஊழியர்கள் ஒப்படைத்த நகல் ஆவணங்களில் 3 கண்டெய்னர்களில் ரூ.570 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அசல் ஆவணங்களை காண்பித்த பின்னர் பணத்தை ஒப்படைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
 
ரூ. 570 கோடி அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 பில்லியன் சூரியன்கள் கண்டுப்பிடிப்பு நாசா தகவல்