Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வா மா மின்னலு ! நம் பிரதமர் வந்துருக்காங்க !வா மா மின்னலு !

வா மா மின்னலு ! நம் பிரதமர் வந்துருக்காங்க  !வா மா மின்னலு !
, சனி, 25 பிப்ரவரி 2017 (11:59 IST)
வா மா மின்னலு ! நம் புதிய முதலமைச்சர்  எடப்பாடி வந்துருக்காங்க  ! சென்னைக்கும், மும்பைக்கும் ஷண்டிங் அடித்து கொண்டிருக்கும் நம் கவர்னர் அய்யா வந்துருக்காங்க  !  ஒண்ணே, ஒன்னு கண்ணே கண்ணு நம் பொன்னார் வந்துருக்காங்க  ! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுப் பெற்ற பேடி மா வந்துருக்காங்க  ! எப்போவது தமிழகம் வரும் நம் பெரிய அண்ணன், மோடி ஜி வந்துருக்காங்க  ! வா மா மின்னலு ! வா வந்து பேசு மா !



மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே !

நான் மின்னல். வணக்கம் ! ஆதி யோகி சிலையை திறக்க உங்களை அழைத்து வந்திருக்கிறாரே கார்பரேட் சாமியார் சத்குரு அவர்கள் ! அவர்களை பற்றி நான்கு வரிகள்,

வீட்டில் உள்ள பொருட்களை திருடுவது ஒரு ரகம்
வீட்டையே திருடுவது மற்றொரு ரகம்,
காட்டை கொள்ளை அடிப்பது ஒரு ரகம்
காட்டையே கொள்ளை அடிப்பது  மற்றொரு ரகம்,

இவர் எந்த ரகம் ? என நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. இவருக்கும், சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் ஒரு நூல் இலை தான் வித்தியாசம்.

நீங்கள் சொன்னதுப் போல, யோகா ஆரோக்ய உறுதிக்கான பாஸ்போர்ட் தான், காட்டை அழித்து, யோகா, யோகி, யோகம் என வணிகம் செய்பவர்கள் தரும் செயற்கை  ஆரோக்ய உறுதி எங்களுக்கு  தேவையில்லை. அதை அந்த ஆதி யோகியும் ஏற்க மாட்டார்.

தியானலிங்கத்தின் முன் நெருப்பைக் கொண்டு, யோக கலைகள் மூலம் பிரார்த்தனை செய்ய, நீங்கள் கண்களை மூடி தியானம் செய்கிறீர்கள் அதனால் தான் என்னவோ ! தமிழகத்தில் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு வாழும் விவசாயிகள்  உங்கள் கண்களுக்கு தெரியவில்லை.

நீங்கள் தலை வணங்கிய லிங்க பைரவி அனைத்து அருளையும் சக்தியையும் உள்ளடக்கியவள். அதைப்  போல அனைத்து அதிகாரங்களையும்  பெற்ற நீங்கள் ! தமிழக விவசாயிகள் நலன் சார்ந்த, காவேரிப் பிரச்சனையில் வாய் மூடி மௌனி ஆனது ஏனோ ?

உங்களை விட்டால் ஆதியோகி சிலையைத்  திறக்க திறமையானவர்கள் யார் இருக்கிறார்கள் ? சோம்நாத் மண்ணின் மைந்தனே !  ஆறு முகம் கொண்ட கார்த்திகேயன் கதை சொன்னீர்கள் ! மயிலும் நாகமும் கதை சொல்லி, வேற்றுமையைப் புறந்தள்ளுங்கள் என்றீர்கள் ! ஆனால் நீங்கள்  ஒட்டு மொத்த தமிழகத்தையும் வார்தாவின் போது வரட்டா ? என்று புறந் தள்ளினீர்கள் !

மஹா சிவ ராத்திரி மைதானம்,  மஹா யோக யாக்ன  சுடர் விட்டு எரியும் போது, தாங்கள்,  கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இறைவன் உள்ளான் என்று நீங்கள் சொன்ன போது என் இதயம் சற்றே வலித்தது. ஆனால் உங்களின் இதயத்தில் தான் தமிழகம் இல்லை.

நீங்கள் சொன்னதுப் போல நல்லவற்றிக்காக போராடும் சக்தியை யோகா தரும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக களத்தில் அமர்ந்திருக்கும் எம் ஒவ்வொரு  சகோதரிகளும், சகோதரர்களும் யோகிகள் தான், அவர்கள் செய்வதும் யோகம் தான்,   யோகா தான்.

வரலாறு உங்களை மிகப்பெரிய ஆன்மிகவாதி என்று எழுதி விட்டது. ஆனால் தமிழகத்தின் மேல் கருணை இல்லாதவன் என எழுத வேண்டும் என்று நினைக் கிறீர்களா ? தமிழகத்தில் நடந்து வரும் விவசாயிகள் தற்கொலைகள் பற்றி துளியும் அறியாதவரா நீங்கள் !  

காசியின் விஸ்வநாதரைப் போல, கன்னியாகுமரியின் உமையாளைப் போல ஆதி யோகி சிலையும் வரலாற்றில் இடம் பெறும். அத்துடன் அந்த ஆதியோகி யை வடிவமைத்தவன், லட்சக்கணக்கான சதுர அடி காடுகளை அக்கிரமித்தவன் என்றும் வரலாறு பேசும்.

புதிய யுகத்தில், யோகா மூலம் மனித நேயத்திற்கு தேவையான அனைத்தையும் பெறுவோம் என்றீர்கள் ! இறுதியாய், என் சிறிய அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன் ! இயற்கையின் மூலம் மனித நேயத்திற்கு மட்டும் அல்ல, மனித குலத்திற்கு தேவையான அனைத்தையும் பெற முடியும். அதை நம் முன்னோர்கள் பெற்றார்கள் !  இன்று நாம் இழந்து கொண்டு இருக்கிறோம் !

webdunia


இரா காஜா பந்தா நவாஸ்
பேராசிரியர்
[email protected]

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வின் சுவாசக்கருவியை அகற்றியது தான் மரணத்திற்கு காரணம்?: யார் அகற்றியது?