மாமல்லபுரத்தை பிரதமர் மோடியும் சீன அதிபரும் பார்வையிட்ட நிலையில், இருவரின் இடையே நடந்த உரையாடலை கவனமாக மொழிப்பெயர்த்த தமிழரான மதுசூதனனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் இரு நாட்டு உறவுகள், பொருளாதாரம் ஆகியவற்றை குறித்து சந்திக்கும் நிகழ்வை முன்னிட்டு, நேற்று மாமல்லபுரத்தை இருவரும் பார்வையிட்டனர். அப்போது பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்கள் குறித்து உரையாடினர். இந்த இருவரின் உரையாடலை அவர்கள் அருகிலேயே இருந்து அவர்களுக்கு கவனமாக மொழி பெயர்த்து தந்தவர் மதுசூதனன் என்பவராம்.
யார் இந்த மது சூதனன்?? தமிழகத்தை சேர்ந்த மதுசூதனன் ரவீந்திரன், சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக உள்ளார் என தெரியவருகிறது. இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்பு முடித்துள்ளதாகவும், கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்ததாகவும் தெரியவருகிறது.
இவர் நெடுங்காலமாக சீனாவிலேயே வசித்து வந்ததால், அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றுத்தெரிந்தவர் என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பின்போதும் மதுசூதனன் தான் மொழிப்பெயர்ப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.