மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாதது அக்கட்சியினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
டார்ச் லைட் சின்னத்தை முன்னிறுத்தி கமல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், வேறு சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது அக்கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்காததற்கு தாமதமாக விண்ணப்பித்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டார்ச் லைட் சின்னம் வழங்கப்படாததற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டால், கலங்கரை விளக்கத்தை வாங்குவோம். எனது சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைப்பதாகவும் கமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.