தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியடைந்த நிலையில் மநீம பிரமுகர்கள் கட்சியிலிருந்து விலகுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் இறங்கிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நிலையில் 2019 பாராளுமன்ற தேர்தல், நடப்பு சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் மய்யம் போட்டியிட்டது. நடப்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட மய்யம் வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் தேர்தல் முடிந்த கையோடு கமல்ஹாசன் தனது விக்ரம் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனான கருத்து முரண்பாடால் துணைத்தலைவர் மகேந்திரன் முன்னதாக கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ந்து மக்கள் நீதி மய்ய பிரமுகர்கள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ்பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து டிக்டாக் பிரபலமும், மநீம வேட்பாளராகவும் இருந்த பத்மப்ரியாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவ்வாறாக கட்சியிலிருந்து பலர் விலகி வரும் நிலையில் கமல்ஹாசன் கட்சிக்கு இது பெரும் சரிவாக அமையும் என பேசிக் கொள்ளப்படுகிறது.