விதி தெரியாத ஜென்மங்கள் எம்பியாக உள்ளனர்: வெற்றிவேல் எம்எல்ஏ அநாகரிக பேச்சு!
விதி தெரியாத ஜென்மங்கள் எம்பியாக உள்ளனர்: வெற்றிவேல் எம்எல்ஏ அநாகரிக பேச்சு!
அதிமுகவில் நாளுக்கு நாள் வார்த்தை மோதல்கள் அதிகரித்தவாறே உள்ளன. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் மூன்று அணியாக உள்ள அதிமுக ஒருவரை ஒருவர் வசைபாடி வருகிறது. ஆனால் இந்த விமர்சனங்கள் நாகரீகமற்ற முறையில் இருப்பது அதிமுக தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
சமீபத்தில் அதிமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்தது. இந்த முடிவு சசிகலாவுடன் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என மக்களவை சபாநாயகர் அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த, அருண்மொழித் தேவன், கோ.ஹரி ஆகிய எம்பிக்களும் முருகுமாறன் எம்எல்ஏவும் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டுமென முதலில் குரல்கொடுத்தவர் தம்பிதுரைதான், தற்போது அவரின் பேச்சு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. தம்பிதுரை சென்னையில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சும் பேசுகிறார் என கூறினர்.
இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பின் போது பதிலடி கொடுத்தார். கட்சியின் விதி தெரியாமல் சிலர் பேசி வருவது வெட்கப்படவேண்டிய விஷயம். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று தெரியாத ஜென்மங்களாக உள்ளனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் என்பதில் எந்த மாற்றமுமில்லை என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை ஜென்மங்கள் என்ற வார்த்தையால் எம்எல்ஏ விமர்சித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.