முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, மூன்று அணியாக பிரிந்து உள்ளது. இனி அதிமுகவை ஒன்றிணைப்பது முடியாத காரியம் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களே உணர்ந்துள்ள நிலையில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என சூலூர் எம்எல்ஏ கனகராஜ் அதிரடி தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த மூத்த அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளரான சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ், திடீரென இந்த கருத்தை கூறியிருப்பதால் முதல்வர் எடப்பாடியார் மற்றும் அமைச்சர் வேலுமணிக்கும் இதே கருத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது தனது தனிப்பட்ட கருத்து என்று கனகராஜ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும். அப்போது தான், நலத்திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் பாஜகவை அவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை என்றும் அவர் கூறினார்