ஜெ.வின் டிரைவர் கனகராஜுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இதுதான்: எம்எல்ஏ ஆறுகுட்டி விளக்கம்!
ஜெ.வின் டிரைவர் கனகராஜுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இதுதான்: எம்எல்ஏ ஆறுகுட்டி விளக்கம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த காவலாளியை கொன்றுவிட்டு அங்கு கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளையில் பணம், ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர் சயன் ஆகியோர்தான் கூலிப்படையின் மூலம் இதனை செய்ததாக கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கனகராஜ் சேலத்தில் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி பலியானார். அதனை தொடர்ந்து அவரது நண்பரும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனும் விபத்தில் சிக்கி படுகாயமடைய தமிழகம் முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஓபிஎஸ் அணியில் உள்ள ஆறுகுட்டி எம்எல்ஏவுக்கும் கனகராஜுக்கும் இடையே செல்போனில் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து இன்று அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்து வந்த கனகராஜ் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கு அறிமுகமானார். நான் சென்னை செல்லும்போதெல்லாம் எனக்கு மாற்று டிரைவராக கனகராஜ் தான் வருவார்.
நான் போயஸ் கார்டனில் வேலை செய்துள்ளேன் என கூறி பழகினார் கனகராஜ். அதிமுக இரு அணியாகப் பிரிந்தபோது எம்எல்ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற்றபோது நான் இருக்கும் இடத்தை மாற்று அணிக்கு தெரிவித்தது கனகராஜ் தான்.
இதனால் அவரை நீக்கிவிட்டு வேறு டிரைவரை நியமித்தேன். கனகராஜுடன் பேசியே 2 மாதங்களுக்கும் மேலாகிறது, அவருடன் வேறெந்த தொடர்பும் எனக்கில்லை என எம்எல்ஏ ஆறுகுட்டி கூறினார்.