தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசுக்கு அதை கட்டுக்குள் கொண்டு வர தெரியவில்லை என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 2 மாதங்கள் ஆன பிறகும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் நான்காவது ஊரடங்கு இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள சூழலில், தமிழகத்தில் அதிகரித்துள்ள பாதிப்புகளால் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணமிருந்தால் மக்களிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். மார்ச் தொடங்கி மே வரை 'கொரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து! பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர வேண்டும்.மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். வரலாற்றில் கடும்பழிக்கு இரையாகாதீர்கள் -இதுவே என் கோரிக்கைகளின் அர்த்தம்!” என்று கூறியுள்ளார்.