திருவள்ளுவர் சிலை அவமானப்படுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் இதற்கு அதிமுக அரசு வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் காவி வண்ண உடை அணிந்திருப்பது போல் பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமறை கருத்து பேசிய திருவள்ளுவருக்கு பாஜக காவி சாயம் பூச முயல்வதாக தி.க மற்றும் தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே திருவள்ளுவர் காவி உடைதான் அணிந்திருந்ததாகவும் திராவிட கழக ஆட்சியில் அந்த அடையாளம் அழிக்கப்பட்டதாகவும் பாஜகவினர் வாதாடினர்.
இதனால் திருவள்ளுவர் குறித்த பிரச்சினை சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அடையாளம் தெரியாத சில நபர்கள் பிள்ளையார்ப்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை கண்களில் கருப்பு மை பூசி சேதப்படுத்தினர். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது.
திருவள்ளுவர் சிலை தாக்கப்பட்டது குறித்த தனது கண்டனங்களை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.