தமிழ்நாட்டில் தற்போது கட்சி தொடங்குபவர்கள் முதல்வர் ஆவதை நோக்கமாக கொண்டே கட்சி தொடங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கருணாநிதியின் பிறந்தநாளில் அவரது மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று அங்கு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துள்ளார்.
பின்னர் பேசிய அவர் “இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவர்கள் நான்தான் முதல்வர் என்று கூறிக்கொண்டே கட்சி தொடங்குகிறார்கள். ஆனால் 1949ல் கட்சி தொடங்கும்போது முதலமைச்சர் ஆவோம் என கூறிவிட்டு தொடங்கவில்லை. கட்சி தொடங்கி 8 ஆண்டுகள் எந்த தேர்தல்களையும் சந்திக்காமல் இருந்தோம். மக்களுக்கு சேவை செய்யும் கட்சியாகவே திமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூறியுள்ளார்.