கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலமல்ல என்பதை ஆதரத்தோடு நிரூபிப்போம் என ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின், பஞ்சமி நிலம் குறித்து அசுரன் திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இதை தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என கூறினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக முக ஸ்டாலின், முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல என கூறினார். இதையடுத்து, ராமதாஸ் முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு ஸ்டாலினை குறிப்பிட்டு கூறினார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நான் மூலப்பத்திரத்தை காண்பிக்கிறேன், ஒரு வேளை முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகிக்கொள்கிறேன், ஆனால் பஞ்சமி நிலமாக இல்லை என்றால், ராமதாஸும் அவரது மகனும் அரசியலை விட்டு விலகிவிடவேண்டும் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முரசொலி அலுவலக கட்டிடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார். இதனிடையே டெல்லியில் உள்ள தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்தில் தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல. அது தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல, ஒவ்வொரு கழக தொண்டனின் உயிர் மூச்சு. கேவலம் தற்காலிக அரசியல் லாபத்திற்காக பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல கழகத்தின் எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.
முரசொலி நிலம் குறித்த அபாண்ட பழியை உரிய அதிகாரம் படைத்த ஆணையத்திடம் உரிய நேரத்தில் வழங்கு உண்மை தன்மையை நிரூபிப்பேன் என கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன். இந்த உறுதியே வீண் பழி சுமர்த்துவோர் அனைவருக்கும் உறிதியான பதில் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.