Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணொலிப் பொதுக்குழு, கழகத்தின் புதுமைக்குழு: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!

காணொலிப் பொதுக்குழு, கழகத்தின் புதுமைக்குழு: தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்!
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:55 IST)
நேற்று காணொலி மூலம் பொதுக்குழுவை நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று அந்த பொதுக்குழு குறித்து தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிததத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9.  கழகத் தோழர்களுக்கு  செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்புமும் ஊக்கமும் தரும் மாதம்தான்! செப்டம்பர் 15 - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள். செப்டம்பர் 17 - ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள்தான், நம் கழகமும் பிறந்தநாள்!
எனவே, முப்பெரும் விழாவாக அதனை நாம் கொண்டாடி மகிழ்வது வழக்கம். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்றைய செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதுமே உண்டு என்பதைப் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும், உங்களின் உழைப்பாலும் - தமிழக மக்களின் பேராதரவாலும், தி.மு.கழகத்தை இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்த்து வியப்படைந்தது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, தி.மு.கழகம் தன் வலிமையைக் காட்டியது. இப்போது, கொரோனா காலத்தில் அரசியல் பணிகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள் - பேரணிகள் - மாநாடுகள் இவற்றிற்கு அனுமதி இல்லாத சூழலில், 3500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்துவதென்பது சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் இருந்தது.  
 
கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறிகளாகவும் மாற்றுகின்ற வலிமை, எளிய மக்களின் இனிய இயக்கமான தி.மு.கழகத்திற்கு உண்டு என்பதை, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். காணொலி வாயிலான பொதுக்குழுவும் அப்படிப்பட்டதுதான். கழகத்தின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, மாவட்ட மாநாடுகள் வரிசையாக நடைபெறும். அதில் கிடைக்கின்ற ஊக்கமும் அனுபவமும் மாநில மாநாட்டைச் சிறப்பாக நிறைவேற்றிட உதவும். அப்படித்தான், இந்தக் கொரோனா நோய்த்தொற்றினால் உருவாகியுள்ள ஊரடங்குக் காலத்தில்,  ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகவே தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளான உங்களைச் சந்தித்து வந்தேன்.
 
மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய - நகர நிர்வாகிகள், கழகத்தின் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் எனக் காணொலி வாயிலாக நாள்தோறும் சந்திப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தையும் காணொலி வாயிலாக நடத்தினோம். இந்தத் தொடர் அனுபவங்களும், அதனால் கிடைத்த ஊக்கமும்தான், அனைத்து மாவட்டக் கழக நிர்வாகிகளின் முழுமையான உற்சாகமான ஒத்துழைப்புடன் செப்டம்பர் 9 அன்று காணொலி வாயிலான பொதுக்குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முடிந்தது.
செப்டம்பர் 8-ம் தேதி முழுவதும் அதற்கான ஒத்திகைகள் முழு வீச்சில் நடந்தன. தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கிலிருந்து கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், கழக நிர்வாகிகள், கலைஞர் தொலைக்காட்சிக் குழுவினர் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். ஒவ்வொரு மாவட்டக் கழகத்திலும் காணொலிக் காட்சிக்கான ஏற்பாடுகள் எப்படி அமைந்துள்ளன, அரங்க அமைப்பு எப்படி உள்ளது, ஒலி - ஒளி தடங்கலின்றி இருக்கிறதா என்பதையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கவனித்தார்கள். மாவட்டக் கழக நிர்வாகிகளும் அதே அக்கறையுடன் செயல்பட்டனர்.
 
வழக்கமான பொதுக்குழு என்றால், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் இடம்கொள்ளாத அளவுக்குக் கூட்டம் கூடி இருக்கும். ஆனால், நேற்றைய பொதுக்குழுவில் தனிமனித இடைவெளிக்கேற்ப நாற்காலிகள் போடப்பட்டு, மாநில அளவிலான நிர்வாகிகளும், சென்னை மாவட்டக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும்தான் கலந்துகொண்டனர். அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கலைஞர் அரங்கம் உருவானதுபோல, மிகச் சிறப்பான முறையிலே பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற காணொலிக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டங்களில் மட்டுமல்ல, மும்பை, கர்நாடகம், ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி - காரைக்கால் எனப் பிற மாநிலங்களில் உள்ள கழக அமைப்பினரும் காணொலிக் கூட்டத்தில் பங்கேற்றது வெகு சிறப்புக்குரியது.
 
ஊரடங்கு நேரத்தில் நடைபெற்ற காணொலி நிகழ்வுகளின்போது, பேரூர் கழக நிர்வாகிகளிடம் பேசிய வேளையில் தங்களையும் பொதுக்குழு உறுப்பினர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர். அதனால், கழக அமைப்பின் சட்டதிட்டங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பேரூர் கழகச் செயலாளர்களும் இம்முறை பொதுக்குழு உறுப்பினர்களாகப் பங்கேற்றனர். அதுமட்டுமல்ல; அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த காணொலி வாயிலான பொதுக்குழுவுடன், மற்ற பல இடங்களின் காணொலி நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியிலும் மேலும் சில தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பானதால், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் முழுமையாகக் காணும் வாய்ப்பைப் பெற்ற முதல் பொதுக்குழு என்ற சிறப்பும் சேர்ந்தது.
 
தொழில்நுட்பத் தடங்கலின்றி - நேர்த்தியாக - ஒவ்வொருவரின் கருத்துகளும் தெளிவாகக் கேட்கும் வகையில் வெற்றிகரமாக இதனை நடத்திக் கொடுத்து, இந்திய அரசியலில் புதிய தடம் பதிக்கச் செய்து இதுவரை யாரும் கண்டிராத புதுமையைச் சாத்தியப்படுத்திய அத்தனைப் பேருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தின் தொடக்கக்கட்டத்தில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் என்பது கிராமத்து வீட்டுத் திண்ணைகளில் தலைவர்களும் நிர்வாகிகளும் படுத்துறங்கி எழுந்து, அப்பகுதியிலேயே ஒன்றுகூடிக் கூட்டத்தை நடத்தியது குறித்து திராவிட எழுத்தாளர் சுபகுணராஜன் நினைவூட்டிப் பதிவிட்டிருக்கிறார். திண்ணையில் தொடங்கிய பொதுக்குழு, உலகம் வியக்கும் வகையில் திட்பம் வாய்ந்த இணைய வழியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்குழுவின் முக்கியத்துவம் என்பது, கழகத்தின் புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு என்பதாகும். நம் உயிர்நிகர் தலைவரின் கொள்கைச் சகோதரனாகத் துணை நின்று - தோள் தந்து - நிழல் வழங்கிய இனமானப் பேராசிரியர் அவர்கள் மறைவெய்திய நிலையில், அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு அருமை அண்ணன் துரைமுருகன் அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார்.
 
பேரறிஞர் அண்ணா அவர்களுடன் சிறைவாசம் - மிசாவில் ஒரு வருடம் சிறைவாசம் - 9 முறை சட்டமன்ற உறுப்பினர் - தணிக்கைக் குழு உறுப்பினர் - மாணவர் அணிச் செயலாளர் - தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் - கழகத் துணைப் பொதுச் செயலாளர் - கழகப் பொருளாளர் எனப் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட கொள்கைப் பெட்டகமான துரைமுருகன் அவர்கள், பொதுப்பணித்துறை அமைச்சராகத் தமிழகத்திற்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வழங்கியதோடன்றி, கலைஞர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் கட்டப்பட்ட அணைகளுக்கான பணிகளை முன்னின்று மேற்கொண்டு நீர்மேலாண்மையைச் சிறப்பாக மேற்கொண்டவர். தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கினியவர். சட்டமன்றத்தில் கனலாகவும் - எங்களிடத்தில் புனலையொத்த கனிவுடனும் - ஊடகங்களில் கலகலப்பாகவும் தன் மனதை மறைக்காமல் வெளிப்படுத்தும் பண்பாளரான அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும், நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரும், இனமானப் பேராசிரியரும் வகித்த பொதுச் செயலாளர் பதவியினை ஏற்று சிறப்புடன் செயல்படுவார் என்பதில் உங்களைப் போலவே எனக்கும் பெரும் நம்பிக்கை உண்டு.
 
அண்ணன் துரைமுருகன் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு அண்ணன் டி.ஆர்.பாலு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றிருக்கிறார். மிசா சிறைவாசம் கண்டவர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து திறம்படப் பணியாற்றியவர். நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் அதன்பிறகு 6 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், சுற்றுச்சூழல் துறைக்கான அமைச்சராகப் பொறுப்பேற்று, 2002-ல் புதுடெல்லியில் நடைபெற்ற புவிவெப்பம் மற்றும் தட்பவெப்ப மாறுதல் குறித்த ஐ.நா. அமைப்பின் சார்பிலான 8-ஆவது மாநாட்டில், 169 நாடுகளிலிருந்து பங்கேற்ற 4960 பங்கேற்பாளர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதி செய்தவர். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து இன்று நாம் விரைவாக பயணிக்கும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி, கத்திப்பாரா உள்ளிட்ட மேம்பாலங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்.
 
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ராணுவத்துச் சிப்பாய்! அ.தி.மு.க. ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, அதனைக் காணப் பொறுக்காமல் கொதிப்படைந்து, மத்திய அமைச்சர் பதவியில் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, தலைவர் கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறன் அவர்களுடன் கைதானவர். கழகத்தின் ஆவேசம் நிறைந்த போராட்டக்காரர்; சளைக்காத போராளி!
 
கழகத்தின் தலைமைப் பொறுப்பில் உங்களால் அமரவைக்கப்பட்டிருக்கிற நானும், பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணன் துரைமுருகன் அவர்களும், பொருளாளராகத் தேர்வாகியுள்ள அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும் மிசா சிறைவாசிகள். ஜனநாயகம் காக்கும் போரில், நம்மையே கொடுத்தேனும் இயக்கத்தைக் காக்க வேண்டும் என்ற தலைவர் கலைஞர் அவர்களின் ஆணையேற்று செயல்பட்டு, பொதுவாழ்வில் பயணிப்பவர்கள். வட்டக் கிளைக் கழகத்தில் உறுப்பினராகி, படிப்படியாக தலைமைக் கழகப் பொறுப்பிற்கு வந்திருப்பவர்கள். கொள்கை உறுதியுடன் - போர்க்குணமிக்க உழைப்பு உள்ள எவரும் இந்த இயக்கத்தில் உயர்நிலைக்கு படிப்படியாக உயர்ந்திட முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறோம். கழகத்தில் அதற்கான வாய்ப்புகள் தொடரும் என்பதன் அடையாளமாக ஏற்கனவே மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பங்களிப்பு உள்பட 3 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ள நிலையில், கழகத்தின் கட்டமைப்பையும் பணிகளையும் விரிவாக்கிடும் வகையில், மேலும் 2 துணைப் பொதுச் செயலாளர்களை நியமனம் செய்வதற்கேற்ற வகையில் கழக அமைப்பு விதிகளில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் க.பொன்முடி அவர்களும், மத்திய முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஆ.ராசா அவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பகுத்தறிவு - சுயமரியாதைக் கொள்கை வழி, கழகத்தில் உறுதியுடன் பணியாற்றும் இருவருமே அவரவர் மாவட்டத்திலிருந்து காணொலி வாயிலாக தங்களின் ஏற்புரையை நிகழ்த்தினார்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
 
17 ஆண்டுக்காலம் ஆசிரியப் பணியாற்றியவர் பொன்முடி அவர்கள். திராவிட இயக்கமும் - கறுப்பர் இயக்கமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தனது ஆசிரியப் பணியைத் துறந்துவிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அவரது அமைச்சரவையிலே மக்கள் நல்வாழ்வுத் துறை - போக்குவரத்துத்துறை - உயர்கல்வித்துறை ஆகியவற்றின் அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்டவர். விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளராகக் கழகத்தைக் கட்டிக் காத்தவர். ஆழ்ந்த சிந்தனையும் அதனை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக எடுத்துரைக்கும் நற்றமிழ்ப் பேச்சாளரும் ஆவார்.
 
ஆ.இராசா அவர்கள் இளம் வயதிலேயே திராவிட இயக்கச் சித்தாந்தத்தில் ஊறிய சிறந்த படிப்பாளர், கருத்தாளர். தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் எழுத்துகளையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் கற்றவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றுபவர். வாஜ்பாய் அவர்கள் அமைச்சரவையிலும் மன்மோகன் சிங் அவர்களின் அமைச்சரவையிலும் மத்திய அமைச்சராக இருந்து, தனக்கு வழங்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர். இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் எளிய மக்கள் கையிலும் செல்பேசி இருப்பதற்குக் காரணமானவர். அதன் காரணமாகவே, ‘பொய்க்கற்றை வழக்கில்’ சிக்கவைக்கப்பட்டு, சுற்றி நின்ற பகைக்கூட்டத்தை சட்டம் எனும் ஒற்றைவாள் ஏந்தி சுக்குநூறாக்கி, தகத்தகாய சூரியனாகத் தலைவர் கலைஞர் அவர்களின் இதயத்தில் ஒளிமிகுந்த இடம்பெற்றவர். கழக அமைப்பில் திரு. இ.பெரியசாமி, திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் திரு. செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ள நிலையில், கழகத்தின் ரத்தநாளங்களான உடன்பிறப்புகளின் பேராதரவுடன் முனைவர் க.பொன்முடி அவர்களும், வழக்கறிஞர் ஆ.ராசா அவர்களும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முதன்மைச் செயலாளராக திரு. கே.என்.நேரு அவர்கள் செயலாற்றி வருகிறார்.
 
எந்தப் பொறுப்பில் இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்பிற்குரிய பொறுப்பு. தொண்டர்களே இந்த இயக்கத்தின் அடிப்படை வலிமை. அதனை உணர்த்தும் வகையில் கழகத்தின் முன்னாள் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி அவர்கள் தொடங்கிப் பல முன்னோடிகளும் வாழ்த்துரை வழங்கினார்கள். நாம் கூடிக் கலையும் சாதாரணக் கூட்டமல்ல; கூடிப் பொழியும் மழை மேகம். கழகப் பொதுக்குழுவும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடும் தீர்மானங்களைப் பொழிந்திருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் தன்னலம் மறந்து பணியாற்றியோருக்கான பாராட்டு - ‘ஒன்றிணைவோம் வா’ எனும் மகத்தான செயல்பாடு, தலைவர் கலைஞர் வழங்கிய அருந்ததியருக்கான 3% உள்ஒதுக்கீட்டுக்கும் - மருத்துவக் கல்வி, முதுநிலை மருத்துவக் கல்வியில் கழகம் நிலைநாட்டிய சமூகநீதி, அபாயகரமான தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, குடிமைப் பணிகள் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் சமூக அநீதி, சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையைக் கைவிட வலியுறுத்தல், ஊழல் அ.தி.மு.க. அரசைப் பாதுகாக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டு பலிகளுக்கு நீதி, கொரோனா பேரிடர் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம், மத்திய - மாநில அரசுகளின் விவசாயிகள் விரோதக் கொள்கைக்கு எதிர்ப்பு, மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி - கழகத்தை அரியணை ஏற்ற சூளுரை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
இந்தத் தீர்மானங்களில் நாடாளுமன்றம் - சட்டமன்றம் ஆகியவற்றில் குரல் கொடுப்பதன் வழி தீர்வு காணக்கூடியவை இருக்கின்றன. நீதிமன்றங்கள் வழியே சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காணக்கூடியவை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலானது மக்கள் மன்றம். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் பேராதரவைத் தொடர்ந்து பெற்றுவரும் திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அரியணை ஏறும் நாளில் தமிழ்நாட்டைப் பீடித்துள்ள இருள் விலகும். உதயசூரியக் கதிர்கள் ஒளி வீசும். அதற்கான வெற்றிப்பாதையைத் திட்டமிட்டு அமைத்து, நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் காணொலி வாயிலாக மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது பொதுக்குழுக் கூட்டம். உங்களில் ஒருவனாக இந்தத் தீர்மானங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை நிறைவேற்றிடும் வகையில் உங்கள் உழைப்பைத் தாருங்கள். ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள். கழகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டு வெறும் வாயை மெல்லுகின்றவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களைத் தவிர்த்து, மக்களிடம் சென்று களப்பணிகளை மேற்கொள்ளுங்கள். அடுத்து அமையவிருப்பது தி.மு.கழக அரசுதான் என்ற மக்கள் மனதில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட சூளுரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் கழக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை
 
இவ்வாறு முக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோவிலுக்கு கல் எடுக்க அனுமதி நஹி! – தடை போட்ட ராஜஸ்தான்!