மனு தர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பதாக திருமாவளவன் பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மனுவை தடை செய்ய கோரி இன்று விசிக நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெண்களை இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மதிமுக பொதுசெயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் ”குறிப்பிட்ட மத நூலில் உள்ள பெண்கள் அடிமைப்படுத்தல் முறையை சுட்டிக்காட்டி பேசியதற்காக திருமாவளவன் மீது சைபட் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் பேசிய வீடியோவை எடிட் செய்து அவர்மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.