தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட மரணங்களில் தமிழக அரசு குளறுபடிகள் செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் 3,409 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா இறப்புகளில் எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை? மரணங்களின் தணிக்கைக்காக 39 கமிட்டிகளை அமைக்க ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டு இப்பொழுது மீண்டும் கமிட்டிக்கான அறிவிப்பு ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் “தன் நிர்வாக தவறுகளால் இலட்சக்கணக்கான உயிர்களுடன் அதிமுக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை குளறுபடிகளைதான் தமிழகம் தாங்கும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.