தமிழக ஆளுனர் ரவி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்றும், அறியாமை காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சில தவறாக நினைத்துள்ளனர் என்றும் பாரத தேசத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தையும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என்றும் தெரிவித்தார்.
கவர்னரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டரில் கூறியதாவது:
சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.
தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன.
ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.