நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரத்தில் இனி மாநில அரசின் கையில் ஒன்றுமில்லை என்ற ரீதியில் அதிமுக அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் மத்திய அரசு நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தக்கூடாது என மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வந்தாலும் மற்ற மாநிலங்களுடன் தமிழகம் மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இந்த நீட் விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ ”தமிழகத்தில் இன்று நீட் தேர்வு நடைபெற முன்பு ஆட்சியில் இருந்த திமுகதான் காரணம். ஆனால் இப்போது திமுக தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை நீட் தேர்வு நம் கையை விட்டு போய்விட்டது” என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.