நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் இந்த ஒரு வருடத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதேபோல் அதிமுக, திமுக தலைவர்களும் கமல்ஹாசனை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து அவர்களுடைய ஊழல் பொதியை சுமக்க தான் தயாராக இல்லை என்று கமல் சமீபத்தில் பேட்டி அளித்தார். இதற்கு திமுக தரப்பில் இருந்து ஏற்கனவே கடுமையான கண்டனங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசை பற்றி குறை சொல்லும் யோக்கியதை கமலுக்கு கிடையாது என்றும், கமல்ஹாசன் பலசரக்கு கடை நடத்துவதற்கு கூட திறமை இல்லாதவர் என்றும் கூறினார்.
மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வயதாகிவிட்டதால் அரசியல் சரிபட்டு வராது என்று தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதே நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலம் பெற்று அரசியலுக்கு திரும்ப வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார்.