தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியுற்றுள்ளனர். தினக்கூலி தொழிலாளர்களின் உதவியால் ஒருசில பேருந்துகள் ஓடினாலும் அது மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. இன்னும் நான்கு நாட்களில் பொங்கல் திருநாள் வருவதால் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியபோது, 'தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்டதைவிட அதிக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தவறாக நடத்தப்படுவதால்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் பணிக்கு திரும்பி வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதத்தில் ரூ.2,175 கோடி ஒய்வுபெற்றவர்களின் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.350 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் கோரும் 2.57 மடங்கு ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனவே பிடிவாதத்துடன் போராட்டம் நடத்துவதை நிறுத்திவிட்டு நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.