சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் லாக் அப் மரணம் கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும், சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து நீதி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளதாவது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் லாக் அப் மரணம் கிடையாது.
கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக் அப் டெத் என்று பெயர் என விளக்கம் அளித்துள்ளார்.