அனிதா மரணம் குறித்து பதில் சொல்ல முடியாமல் திணறல்: தப்பிச்சென்ற அமைச்சரின் வீடியோ!
அனிதா மரணம் குறித்து பதில் சொல்ல முடியாமல் திணறல்: தப்பிச்சென்ற அமைச்சரின் வீடியோ!
நீட் தேர்வால் தனது மருத்துவர் ஆகும் கனவு சிதைந்து போனதால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இவரது இந்த மரணத்திற்கு தமிழகமே கண்ணீர் வடித்தது. தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அனிதாவின் தற்கொலை மரணம் நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வேகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.
மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், அவரது மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இதனால் மேலும் எந்த ஒரு உயிரும் போகக்கூடாது என்ற கோஷங்களுடன் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. உலகமே பார்த்து வியந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல இன்னொரு போராட்டத்தை தமிழகம் பார்த்து வருகிறது.
மாணவி அனிதாவின் மரணத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆட்சியாளர்கள் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான, மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர் காரில் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் அனிதா பிரச்சனை குறித்து விவாதம் நடைபெற்றதா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார் இந்த கூட்டம் முக்கியமாக கட்சியின் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட கூட்டம் என கூறினார். இதனையடுத்தும் பத்திரிகையாளர்கள் அனிதா பிரச்சனை குறித்து சரமாரியாக கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் அமைச்சர் ஜெயக்குமார் திணறினார். கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து விரிவாக அறிக்கை வெளியிடப்படும் என கூறிவிட்டு தப்பிச்சென்றார்.