ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் இருந்து ஸ்டாலின் மௌனம் காக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும் “காஷ்மீர் விவகாரம், பொருளாதார சரிவு போன்றவற்றை மறைக்கவே மத்திய அரசு இதுபோன்ற கைது நடவடிக்கைகளை நடத்துகிறது” என தெரிவித்திருந்தார்.
மு.க.ஸ்டாலின் எது பேசினாலும் உடனே அவருக்கு பதிலடி கொடுக்கும்படி ஒரு பதிலை தருபவர் மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில் தற்போது அமைச்சர்கள் வெளிநாடு பயணங்களில் இருப்பதை ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் “ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு ஸ்டாலின் அமைதியாகி விட்டார். அடுத்து அவர் கைது செய்யப்படலாம் என அவருடைய உள்ளுணர்வு சொல்கிறது போல! ப.சிதம்பரம் கைதுக்கு ஸ்டாலின் எப்போதாவது மத்திய அரசை விமர்சித்து பேசியிருக்கிறாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆளுங்கட்சி தொண்டர்களும் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதையே வரவேற்கிறார்கள். தனது தேசிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீது ஏற்கனவே சிபிஐ, அமலாக்கத்துறையின் விசாரணை வேட்டைகள் தொடங்கியிருக்கின்றன. 2ஜி வழக்கில் செல்வாக்கு இழந்த திமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவே மிகவும் சிரமப்பட்டு போனார்கள் நிர்வாகிகள். இந்நிலையில் புதிதாய் எந்த பிரச்சினைகளுக்குள்ளும் தலையிட்டு விட வேண்டாம் என திமுக தரப்பில் முடிவெடுத்திருப்பதாகவும், தேசிய பிரச்சினைகளில் தலையிடுவதால் தமிழக மக்களை கவர்ந்து விட முடியாது என்பதால் தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.