Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்… அமைச்சர் கீதா ஜீவா !

குழந்தைகளுக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்… அமைச்சர் கீதா ஜீவா !
, திங்கள், 28 ஜூன் 2021 (08:17 IST)

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுபற்றி வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக மூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘கொரோனா நோய்த் தொற்றால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த மற்றும் பெற்றோர்களில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் நலன் காப்பதற்காக மே 29 அன்று தாயுள்ளத்தோடு சிறப்பு திட்டத்தினை அறிவித்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பி பார்க்க வைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் அக்குழந்தையின் பெயரில் வைப்புத் தொகையாக தமிழ்நாடு பவர் கார்ப்பரேஷனில் செலுத்தப்படும்.

அக்குழந்தைகளின் கல்லூரிப் படிப்பு வரையிலான கல்வி செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். மாதாந்திர பராமரிப்புத் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த 18 வயதுக்குட்பட்ட வறுமைக் கோட்டுப் பட்டியலிலுள்ள குடும்பக் குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் அரசால் வழங்கப்படும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வறுமைக் கோட்டுப் பட்டியலில் ஒருவேளை ஏழை, எளிய மக்களின் பெயர் விடுபட்டிருந்தால், மாவட்ட ஆட்சியர் மேற்படி குடும்பத்தை உடனடியாக அப்பட்டியலில் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாணையிலேயே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு மகத்தான மக்கள்நலத் திட்டத்தை ஜூன் 16 அன்று முதல்வர் தொடங்கி வைத்து, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் பயன்களையும் வழங்கியிருக்கிறார். அதே நேரத்தில், ஆதரவற்ற குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இரண்டு பெற்றோர்களையும் இழந்த 92 குழந்தைகளும், பெற்றோரில் ஒருவரை இழந்த 3,409 குழந்தைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

எந்த ஒரு திட்டத்திலும் வயது வரம்பு, வருமான வரம்பு என்பது மிக முக்கியமான வரையறைகள்தான் என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டத்தைப் பொறுத்தவரை 18 வயதுக்கு உட்பட்டவர்களே குழந்தைகள் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் அனைத்தும் கொரோனாவில் பெற்றோரைப் பறிகொடுத்த குழந்தைகளைக் காப்பாற்றி, கரை தூக்கிவிட வேண்டும் என்ற கருணை உள்ளத்தில் உருவான திட்டமாகும். முதல்வரின் சீரிய சிந்தனையில் உருவான இந்த சிறப்புமிகு திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு மக்களின் மத்தியில் வீணான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக உள்ளன… அன்புமணி ராமதாஸ் பாராட்டு!