தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே பந்தில் 9 ரன்கள் அடிப்பவர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெளிநடப்பு செய்து வந்த எதிர்க்கட்சிகள் இன்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளனர். தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கேள்வி நேரத்தின் போது குண்டூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசின் அனுமதி தேவை எனவும், குண்டூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே ஆண்டில் தமிழகத்தின் ஒன்பது பகுதிகளில் மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை குறிப்பிட்ட விஜயபாஸ்கர் ‘ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், ஆனால் ஒரு பந்தில் 9 ரன்கள் எடுப்பவர் தமிழக முதல்வர் மட்டுமே” என புகழ்ந்துள்ளார்.