மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பதினைந்து கோடி ரூபாயில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்த நிலையில் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.
சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடந்த இந்தக் கூட்டத்தில், முதல்வரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலாவதாக நிறைவேற்றப்பட்டது.
அதற்குப் பிறகு, ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவின் சிலையைத் திறக்க வேண்டும்.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 15 கோடி ரூபாய்க்கு நினைவு மண்டபம் அமைப்பது, எம்.ஜி.ஆர் நினைவிடத்தை, எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நினைவிடம் எனப் பெயர் மாற்றம் செய்வது ஆகிய தீர்மானங்களும் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.