மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக 'மெமோ' வழங்கப்படும் என்று கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில், சேலம் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில், பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி முடிவுகள் கொடுத்த தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன், ”தமிழகத்தில் தேர்ச்சியளவில் சேலம் மாவட்டம், 19ஆவது இடத்தில் உள்ளது. தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, ஆசிரியர்கள் யாரும் பின்பற்றவில்லை.
உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை.
அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆல் பாஸ் என்பதற்க்காக ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை.
இவ்வாண்டு ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, 'மெமோ' வழங்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.