கேரளாவில் இருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகளில் மீண்டும் மருத்துவ கழிவுகள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை தமிழகத்தின் எல்லையில் வந்து கொட்டி விட்டு செல்லும் வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த முறை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அரசும் சுறுசுறுப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும், கழிவுகளை அகற்றும் பணி தொடங்கி விட்டதாகவும் அந்த கழிவுகள் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகளில் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு பின் இனி கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்திற்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.