தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி வேட்பாளர்கள் 150 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா கூட்டணியில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷை ஆதரித்து வைகோ கோவில்பட்டி, கழுகுமலை, துறையூர், கரிசல்குளம், பாண்டவர்மங்கலம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் பேசியவைகோ, ”நான் சிவகாசி தொகுதியில் எம்.பியாக இருந்த போது கோவில்பட்டி நகருக்கு மூன்று பாலங்கள் அமைத்ததோடு, பல்வேறு மக்கள் பணிகளைச் செய்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்லும் பெண்களிடம் அதிமுக, திமுக பணம் கொடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதையும் மீறி வெற்றி பெற எங்களால் முடியும்.
எங்கள் கூட்டணி 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும். சில ஊடகங்கள் மனசாட்சி இல்லாமல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது.
நாங்கள் கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறோம். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்தது இல்லை. கூட்டணி ஆட்சி வேகத்தடை போன்றது. தவறுகள் செய்ய முடியாது.
இந்தத் தேர்தலில் பணத்தினை கொடுத்து வெற்றி பெறலாம் என்று அதிமுக, திமுக நினைக்கிறது. பணநாயகத்தை தோற்கடித்து ஜனநாயகத்தினை காப்பாற்ற எங்கள் கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்றார்.