பிளஸ் 2 முடித்தவுடன் எந்த கல்லூரியில் சேர்ந்து படிப்பது என்று முடிவு செய்து கல்லூரியில் சீட் வாங்குவதற்குள் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து ஒருவழியாக படித்து முடித்தவுடன் தான் உண்மையில் போராட்டம் ஆரம்பிக்கின்றது.
ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை பலர் இழந்து கொண்டிருக்கும்போது புதியதாக எங்கே வேலை கிடைக்கப்போகிறது. ஆனால் சென்னை லயோலா கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி வேலை கிடைக்கவில்லை என்'று மூலையில் உட்காராமால், சொந்த தொழில் செய்ய கிளம்பிவிட்டார். ஆம், அவர் செய்யும் தொழில் நுங்கு வியாபாரம்.
கெளரவம் பார்க்காமல் ஒரு கையில் நுங்கு, இன்னொரு கையில் அரிவாள் என்று களமிறங்கிவிட்ட இந்த நுங்கு வியாபாரிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வரை லாபம் கிடைக்கின்றதாம். பெரிய ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தால் கூட இந்த சம்பளம் அவருக்கு வந்திருக்காது. எனவே படிப்பு என்பது அறிவை வளர்த்து கொள்வதற்காக மட்டுமே, வேலைக்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை என்ற மனப்பான்மையை வளர்த்து கொண்டால், நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்ற ஒன்றே இருக்காது என்று அந்த வாலிபரை உதாரணம் காட்டி டுவிட்டரில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.