தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஏற்கனவே தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 100ஐ நெருங்கி வருகின்றது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் 100% மாஸ்க் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.