தேனி மாவட்டத்தில் தனது மகளை வெட்டச் சென்ற மருமகனை தடுத்த மாமியார் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமக்கள் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவருக்கு குப்பம்மாள் என்பவர் தன் மகளை 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.
ஜெகதீசன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சென்றுள்ளார் அவர். மனைவியை அழைத்து வருவதற்காக ஜெகதீசன் மாமியார் குப்பம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போதும் அவர் குடித்துவிட்டு வந்து உளறியதால் அவரோடு வர மறுத்துள்ளார் மனைவி. இதனால் ஆத்திரம் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை வெட்ட முயன்றுள்ளார். அப்போது தனது மகளைக் காப்பாற்ற குறுக்கே புகுந்து ஜெகதீசனை குப்பம்மாள் தடுத்துள்ளார். இதனால் கோபமான ஜெகதீசன் குப்பம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் குப்பம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஜெகதீசன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.