சென்னையில் ஆகஸ்டு மாதம் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் பல முறை முதலமைச்சர் பதவி வகித்தவர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நலனுக்காக அயராது உழைத்தவர்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி உடல் நிலை மோசமானதால் காலமானார். இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 7 கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் கருணாநிதியின் உருவசிலை திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டு 7 ஆம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
மேலும் இந்த சிலையை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி திறந்துவைக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருணாநிதியின் உருவ சிலையை சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.