தனது ட்விட்டரில் வெளியான சர்ச்சைக்குள்ளான அனிதா வீடியோவுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அனைத்து விதமாகவும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பேசுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டுள்ள டப்பிங் செய்யப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் அனிதாவின் சகோதரர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கிலிருந்து நீக்கியுள்ளார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து விளக்கமளித்துள்ள மாஃபா பாண்டியராஜன் “அனிதா குறித்து எனது ட்வீட்டரில் பதிவு செய்யப்பட்ட வீடியோவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ; எனது அனுமதி இல்லாமல் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. என் அனுமதியின்றி பதிவிட்டவர்கள் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் மூலமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்துள்ளார்.