சென்னை மதுரவாயலில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.
மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று நடத்தி வரும் டாஸ்மாக்கிற்கு பூட்டு போடும் போராட்டத்தில் அதிகமான மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
மதுரவாயலில் உள்ள டாஸ்மாக் கடையால் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் இந்த கடையை மூட மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கலைக்க காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சியில் வன்முறை ஏற்பட்டது.
போராட்டத்தை கைவிட காவல் துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் முற்பட்டனர் ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துழைக்காததால், குண்டுக்கட்டாக அவர்களை வேனில் தூக்கினர். இதில் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
நன்றி: Liveday Tamil Nadu
மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய தடியடியில் பெண் ஒருவரின் தலையில் அடிபட்டு அவருக்கு, இரத்தம் கொட்டியது. மாணவர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.