Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு உண்மை - விஜயகாந்த் பெருமிதம்

ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு உண்மை - விஜயகாந்த் பெருமிதம்
, வியாழன், 5 மே 2016 (15:07 IST)
என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கும்பகோணம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், “நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எல்லோரும் விஜயகாந்த் முதல்வர் ஆகுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவிடம் உள்ளது போல் ஊழல் என்னிடம் இல்லை. கொள்ளையடிக்கும் திறமை இல்லை.
 
நாங்கள் ஆறுகட்சியை சேர்ந்தவர்கள், என்றைக்குமே எங்கள் கூட்டணிக்கு ஏறுமுகம் தான். எங்கள் ஆட்சி மக்கள் புரிந்துக்கொள்ளும் ஆட்சியாகத்தான் இருக்கும். அதிமுக, திமுக போன்று ரவுடிகளின் உருட்டுக்கட்டை ஆட்சி கிடையாது. நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம்.
 
அதிமுகவும் - திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். இவர்களது ஆட்சி சாதாரணமானவர்களை பெரும்பாதிப்புள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் நாட்டை சின்னாபின்னமாக்கி சீரழித்துள்ளனர். இவர்களை கேட்க எந்த நாதியும் இல்லை என நினைக்கின் றனர். இவர்களை கேட்பதற்காக நாங்கள் உருவெடுத்துள்ளோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அப்பழுக்கற்றவர்கள்.
 
தமிழகத்தில் டிவிக்களும், பத்திரிகைகளும் சூட்கேசை வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக எழுதுகிறார்கள். என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
 
தற்போதைய தேர்தல் தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும் நடக்கின்ற போர். இதில் தர்மத்தின் பக்கம் எங்கள் கூட்டணி. அதர்மத்தின் பக்கம் திமுக, அதிமுக. நீங்கள் தர்மம் வெல்ல வாக்களிக்க வேண்டும். நாதியில்லா இந்த மக்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அதிமுக, திமுக நினைக்கிறது.
 
அவர்களிடம் பணம் வாங்குவதை தவிர்த்து, விரட்டிவிட்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்றார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்தின் வெளிநாட்டு பிளான்: தேர்தல் தோல்வி பயம்?