கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்த உத்தரவில் பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். அவ்வாறு தண்ணீர் பீய்ச்சுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீச்சி அடிக்க கூடாது. இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமினாதன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.