விருகம்பாக்கம் பிரியாணி கடையில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினரை கடுமையாக எச்சரித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.அன்பு பிரியாணி உணவகத்தில் பிரியாணிக்காக திமுக நிர்வாகி யுவராஜ் நடத்திய குத்து சண்டைதான் தற்போது சமூக வலைத்தளங்களில் முக்கிய செய்தியாக இருக்கிறது. யுவராஜின் செயலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.அதோடு, ‘ஓசிபிரியாணிதிமுக’ என்கிற ஹேஷ்டேக் நேற்று டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது..
யுவராஜ் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகியாக இருக்கிறர். இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக திமுக தரப்பு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், தலைமறைவாக உள்ள யுவராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் இந்த சம்பவம் திமுக தரப்பிற்கும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட கடைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு சென்று கடையின் முதலாளி, நிர்வாகி, மற்றும் தாக்குதலால் காயமடைந்த ஊழியர்கலை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி தகுந்த தண்டனை கிடைக்கும் என அவர் உறுதி அளித்தார்.
மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில் “தி.மு.கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்” என அவர் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.