நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தினார். ஆனால், ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, தினகரன் தரப்பும் மற்றும் திமுகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளது. வருகிற 20ம் தேதி அந்த வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன.
இந்நிலையில், திண்டுக்கல்லில் நேற்று திமுக சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் “ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்காவிட்டால் மக்கள் மன்றத்தை நாடுவோம். அது ஆட்சியை கவிழ்ப்பதற்காக இல்லை. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்னும் 3 நாட்களில் நீதிமன்றத்தின் மூலம் நல்ல செய்தி வரும். அப்படி இல்லையெனில் மக்களை திரட்டி எடப்பாடி அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என அவர் பேசினார்.