Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 தொகுதிகளிலும் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்.! மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்..!!

stalin

Senthil Velan

, ஞாயிறு, 10 மார்ச் 2024 (16:26 IST)
40 தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
 
நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்ற தலைப்பில் திமுக தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசில் மக்களாட்சி மாண்பைக் காக்கும் மகத்தான புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை ஆளும் பாஜக அரசு, நாட்டையே பல்லாண்டு காலம் பின்னோக்கிக் தள்ளிவிட்டது. எனவே,இதை இப்போது தடுக்காவிட்டால் இனி எப்போதும் தடுக்க முடியாது என்ற எண்ணத்தில் தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகளின் அணிச் சேர்க்கை நடைபெற்றது.
 
பா.ஜ.க.வை வீழ்த்துவது என்பது மட்டுமல்ல, அதன் பிறகு அமையப் போகும் அரசானது மக்களாட்சி, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், விளிம்புநிலை மக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசாக அமைய வேண்டும். இந்த நோக்கத்துடன் ‘இந்தியா’ கூட்டணி அமைக்கப்பட்டது.
 
தங்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையுடன் இருந்த பா.ஜ.க. தலைமையானது, அதன் பிறகுதான் களத்தின் உண்மை நிலவரத்தை உணர்ந்தது. ‘இந்தியா’ என்ற சொல்லையே சொல்லாமல் தவிர்த்தது. ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளைத் தன்னுடைய அதிகார அமைப்புகளின் மூலமாக பா.ஜ.க. அரசு வேட்டையாடியாது.

இந்த கூட்டணியின் வலிமையை நாட்டுக்கு உணர்த்தியதே இதுபோன்ற பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைகள் தான். பத்தாண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார்.
 
அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. ‘மீண்டும் மோடி’ என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், ‘வேண்டாம் மோடி’ என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகச் சிறப்பாக முடிவுற்றது. இந்த தேர்தலில் அருமை நண்பர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது.

இந்த அணிக்காக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் செய்ய இருப்பதாக கமல் அறிவித்துள்ளார். 2025 மாநிலங்களவையில் அவரது கட்சியின் குரல் ஒலிக்க இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
நாங்கள் கொடுத்தோம், அவர்கள் பெற்றார்கள் என்பதாக இல்லாமல், ‘அனைவரும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசித் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம்’. அனைத்து தலைவர்களும், ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் இதனை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.

எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.  பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள். இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
 
"2019 நாடாளுமன்றத் தேர்தல்“ - 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இடைத்தேர்தல்கள் - 2021 சட்டமன்றத் தேர்தல் - 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத் தான் வென்று காட்டினோம். ஒன்றுபட்ட இலக்கும், ஒற்றுமைச் சிந்தனையும் கொண்டவர்களாக நம் கூட்டணி இயக்கத் தலைவர்களும், முன்னணியினரும், தொண்டர்களும் இருப்பதால்தான் இத்தகைய தொடர் வெற்றியை நாம் பெற்றோம். எனவே, தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐந்தாவது முறையாகத் தொடர்கிறது வெற்றிக் கூட்டணி.
 
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நாம் நிரூபித்து வருகிறோம். இதனைத் தான் ‘இந்தியா’ கூட்டணியின் தொடக்கக் கூட்டத்தில் நான் வலியுறுத்திச் சொன்னேன். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும், அந்தக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் மற்ற வேறுபாடுகளை மறந்து ஒன்று சேரவும் வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதுதான் இன்று மாபெரும் கூட்டணியாக மலர்ந்துள்ளது.


திமுக தலைமையிலான இக்கூட்டணியின் வெற்றிக்கு நமது கட்சியினர் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளிலும், ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று திமுகவினரிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

39 தொகுதிகளுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்..! பட்டியலை வெளியிட்டார் பிரேமலதா..!!