திமுக தலைவர் கருணாநிதி மறைவு பெற்றுள்ள நிலையில், அவர் வகிந்து வந்த தலைவர் பதவி மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படலாம் என செய்தி வெளியே கசிந்துள்ளது.
50 வருடங்களாக திமுக தலைவர் பதவி வகித்து வந்த கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்கோளாறுகள் காரணமாக அவர் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்ததால், மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக அனுமதிக்கப்பட்டார். அதனால், தலைவருக்கான அனைத்து பணிகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில்தான் கருணாநிதி காலமானார்.
எனவே, விரைவில் திமுக தலைவராக முறைப்படி மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பொதுச்செயலாளராக உள்ள அன்பழகன் வயது முதிர்வு காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விடுபட்டு, அவருக்கு பதில் துரைமுருகனை அமர்த்தும் ஆலோசனையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுபற்றிய எந்த தகவலும் திமுக தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது தலைவர் கருணாநிதி எங்களை விட்டு சென்ற துக்கத்தில் இருக்கிறோம். எனவே, இப்போது இதுபற்றி பேச வேண்டிய தேவை இல்லை எனவும் சில திமுகவின் கூறி வருகின்றனர்.