Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை- அண்ணாமலை

பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை-  அண்ணாமலை
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:37 IST)
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை விமர்சிக்கும் தகுதி முக ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதலத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

‘’திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கடகடவென்று ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள்.

1964 ஆம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரைச் சீரமைக்க, மாண்புமிகு பாரதப் [பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்தான் முதன்முதலாக எடுக்கிறார் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். 1964க்குப் பிறகு பல முறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்துப் பேசவோ செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியதற்கு நன்றி முதலமைச்சர் அவர்களே.

துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று தெரியாமல் மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

தமிழக மீனவ சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் திரு உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 - 2014 பத்து ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு,நாள்தோறும் எம் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த உங்கள் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரவசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்தான்.

தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964ல், புயலால் பாதிக்கப்பட்டதனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறுநலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம்,
காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ≈2820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவதுநிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம். தடைக்கால நிவாரணம் 8000 ரூபாய் வழங்குவோம் என உங்கள் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொடுத்தவாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.

மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும்’’  என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பதிவிட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!