கொரோனா நிவாரணமாக ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் சூழலில் மலிவு விலை மளிகை பொருட்கள் இன்று முதல் ரேசன் கடைகளில் கிடைக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு அன்றாட வசதிகளை செய்து தர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரண பணமும், மாத ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உணவுக்கு அவசியமான மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், மளிகை பொருட்களை மலிவு விலையில் ரேசன் கடைகளிலேயே பெற்றுக்கொள்ள அரசு ஏற்பாடு செய்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.
அதன்படி மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, மிளகு, வெந்தயம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்பு பை ரூ.500 விலைக்கு இன்று முதல் ரேசன் கடைகளில் கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.