பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு அதிமுக, திமுக என இரு கட்சிகளும் சொந்தமாக கொண்டாடி வருகின்றன.
திமுக ஆட்சியில் தான் இந்த தீர்ப்பு வந்தது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலாக, அதிமுக ஆட்சியில்தான் இந்த வழக்கு சிபிஐ-க்கு ஒப்படைக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகின்றார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்த வழக்கில் திமுக, அதிமுக ஆகிய இரு அரசியல் கட்சிகளும் உரிமை கோருவது நியாயமற்றது எனக் கூறினார்.
"இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சிகள் வலுவாக இருந்தன. செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்களும் இந்த தண்டனைக்கு முக்கிய ஆதாரங்களாக இருந்தன. அதனால் குற்றவாளிகள் தப்பிக்க முடியவில்லை. எனவே, இதில் யாரும் உரிமை கோருவதில் அர்த்தமில்லை," என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு போன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி தொடர்பான வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்துடன், பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் ஆபாச விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.