Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலஸ்தீன விடுதலையே அமைதிக்கான நிரந்தரத் தீர்வு!-சீமான்

பாலஸ்தீன விடுதலையே அமைதிக்கான நிரந்தரத் தீர்வு!-சீமான்
, செவ்வாய், 10 அக்டோபர் 2023 (19:21 IST)
இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்' நடத்திய தாக்குதல்களும், அதனைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காசா சிறுநிலத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களாலும் இருதரப்பிலும் இதுவன 1000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

போரினால் மக்கள் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதையும், போர் மட்டுமே நிரந்தரத் தீர்வில்லை என்பதையும் உலகில் வேறு எந்த மக்களையும் விட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தாயக விடுதலைப்போரில் இலட்சக்கணக்கான இன உறவுகளை இழந்து நிற்கும் தமிழின மக்களாகிய நாங்கள் நன்கு அறிவோம்.

ஆனால், அடிமையாய் வாழ்வதை விடவும் போராடிச் சாவது மேலானது என்பதுதான் வரலாறு காட்டும் விடுதலைக்கான பெரும் தத்துவம். அன்றைக்கு ஆயுதம் தாங்கிய ஈழ மக்கள் இராணுவமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கம் என்று உலக நாடுகள் முத்திரை குத்தி ஈழ விடுதலைப்போராட்டத்தை எப்படி நசுக்கியதோ, அதைப்போலவே தற்போது ஹமாஸையும் வெறும் பயங்கரவாத இயக்கமாக மட்டுமே உலக நாடுகள் சித்தரித்து வருகின்றனவே அன்றி அதன் போராட்டத்தின் நியாயத்தை எவரும் உணரவில்லை.

இன்றைக்கு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தலைவர்கள், பன்னாட்டு அமைப்புகள் பாலஸ்தீனத்தின் மீது பல ஆண்டுகளாகததாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலைக் கண்டிக்காது அமைதி காத்தது ஏன்?

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள் எவ்வளவு? அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட 1993க்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அகதிகளாக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? இஸ்ரேல் ராணுவம் அழித்தொழித்த பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எத்தனை? 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு 50,000 குழந்தைகள் உட்பட 1,50,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்டுள்ளனர்.

அவற்றையெல்லாம் பற்றி ஏன் உலக நாடுகள் வாய்திறக்கவில்லை? இதோ இந்த நொடியில் கூடத் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளைப் போட்டு அப்பாவி பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் இஸ்ரேலை உலக நாடுகள் இதுவரை தடுத்து நிறுத்தாதது ஏன்?“என் ஒரு கையில் துப்பாக்கி இருக்கிறது, மறு கையில் அமைதியைக் குறிக்கும் ஆலிவ் இலை இருக்கிறது; எதைத் தூக்க வேண்டுமென்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று ஐ.நா. மன்றில் தோன்றி உலகத்தின் முன் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேருரையை ஆற்றிய பாலஸ்தீன தந்தை விடுதலைப் போராளி, புரட்சியாளர் யாசர் அராபத்திற்கு உலக நாடுகள் முன்னிலையில் அளித்த உறுதிமொழியைக் காலில் போட்டு மிதித்து, பாலஸ்தீன விடுதலைக் கனவை நசுக்கிய இஸ்ரேல் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட பாலஸ்தீனதந்தை யாசர் அராபத்திற்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேல் அரசு செய்த பச்சைத் துரோகமே.

ஹமாஸை பாலஸ்தீனியர்களின் பெரும்பான்மை ஆதரவுப்பெற்ற விடுதலை இயக்கமாக உருவெடுக்கச் செய்தது. இன்றைக்கு இஸ்ரேல் எதிர்கொள்ளும் அத்தனை தாக்குதல்களும், கடந்த காலங்களில் இஸ்ரேல் செய்த தீவினைக்கான எதிர் வினைகளே.

எப்பொழுதும் அடிப்பதுதான் வன்முறை; திருப்பி அடிப்பது என்பது ஒருபோதும் வன்முறை ஆகாது. அதுதான் அடிமைத்தளையை அறுத்தெறியும் விடுதலைக்கான பெருவழி.

எப்படி சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தன் பிடரியில் துப்பாக்கியால் தாக்கியபோது ஏற்பட்ட வலி குறித்து, ஒரே ஒரு நிமிடம் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சிந்தித்திருந்தால் அமைதிப்படையை அனுப்பி ஈழ விடுதலையை அழிக்கும் முடிவை எடுத்திருக்கமாட்டாரோ, அதுபோல உலகம் முழுவதும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இனப்படுகொலைக்கு ஆளாகி பேரழிவைச் சந்தித்த யூத இனம், உலகம் தனக்குச் செய்ததை தாம் இன்னொரு இனத்திற்கு செய்திடக்கூடாது என்று ஒரே ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால், தங்களை அரவணைத்து, ஆதரித்து,  அடைக்கலமளித்து அதனால் நிலங்களையும் இழந்த பாலஸ்தீனத்தை, அதன் மக்களை ஒருபோதும் இஸ்ரேல் சிதைத்து அழித்திருக்காது.

பேரழிவை ஏற்படுத்தும் போர் கூடவே கூடாததுதான். உலகம் முழுவதும் அமைதியும், சமாதானமும் வேண்டும்தான். ஆனால் உண்மையான அமைதி என்பது முழுமையான பாலஸ்தீன விடுதலையில்தான் இருக்கிறது என்பதை உலக நாடுகள் உணர்வதுதான் அமைதிக்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் !’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்- முதல்வர்