நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் இந்த சம்பவம் தொடர்பாக எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என உருக்கமான கடிதம் ஒன்றை மாவட்ட ஆட்சியருக்கு எழுதி பதிவிட்டுள்ளார். அதில்,
இனி இப்படி நிகழாது - பேட்டியில் மாவட்ட ஆட்சியர்.
அது அப்புறம்..
நேற்றிரவு உங்களால் நிம்மதியாக உறங்க முடிந்ததா சார்? சோற்றில் கை வைக்க முடிந்ததா சார்? இனி உங்கள் அலுவலக வாசலில் காரில் வந்து இறங்கும் போதெல்லாம் அந்தப் நெருப்புப் பிஞ்சுகளின் மரணத் துடிப்புகள் உங்கள் நினைவில் ஈட்டி பாய்ச்சாதா?
இந்தக் கொடுமையில் ஆட்சியாளர்களைக் குறை சொல்ல எதுவுமில்லை. கந்து வட்டிக்கு எதிராக தெளிவான சட்டங்கள் ஜெயலலிதா ஆட்சியில்தான் இயற்றப் பட்டிருக்கின்றன. அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்குமே இருக்கிறது.
எனவே நீங்கள் பேசியிருக்க வேண்டியது இப்படி சார்!
"ஆறு முறை மனு கொடுக்கப்பட்டும் ஒரு ஆணியும் பிடுங்காததற்காக வெட்கப் படுகிறேன்.. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைக்கும் கருவியோ, மணல் வாளிகளோ, அருகாமையில் தண்ணீரோகூட இல்லாமல் அலுவலகத்தை வைத்திருந்ததற்காக வேதனைப் படுகிறேன். மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பேன். நிகழ்ந்த கொடுமைக்கு தார்மீகப் பொறுப்பேற்கிறேன். அரசின் நடவடிக்கைகளுக்குக் காத்திருக்காமல் நான் பதவி விலகுகிறேன்.
செய்வீர்களா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.